முன்னுரை : இது யாருடனும் விவாதம் செய்ய எழுதபட்ட பதிவல்ல. வீதியின் புழுதிகளில் வீழ்ந்து பொலிவிழந்து, கண்டவர் கால்பட்டு கசங்கி கிடக்கும் தாய் தமிழை கை கொடுத்து தூக்க இயலாமல் வேதனையுடன் வேடிக்கை பார்க்கும் ஒரு தமிழ் காதலனின் உணர்வுகள் என்று மட்டும் பார்த்து சிரித்துவிட்டு செல்லவும்.
என் தாயைவிட அடுத்த பெண் அழகு என்று அடுத்தவர் சொல்லும் பொழுது எத்தனை முறை திரும்பி பார்த்தாலும் ஏனோ என் தாய் மட்டுமே அழகாய் தெரிகிறாள். நம்மாள் தமிழில் நல்ல கவிதைகள், கட்டுரைகள், கதைகள் படைக்கவும் முடியவில்லை முன்னோர் படைத்ததை அடுத்தவர் உமிழும் பொழுது காக்கவும் முடியவில்லை. விவாதித்த காலம் எல்லாம் வீண் வாதம் செய்த காலமாய் தோன்றுவதால் இன்று விவாதிக்க வேண்டிய நேரத்திலும் அமைதியாக இருக்கவே தோன்றுகிறது.
இன்னும் சில நூற்றாண்டுகளில் நான் ரசித்து படித்த தமிழ் புத்தகங்கள் மண்ணுக்கடியில் மட்டும் கிடைக்கும். தமிழனின் வீரமும், ஈரமும், ஈகையும், காதலும் அதற்கு அடுத்த சில நூற்றாண்டுகளில் கரைந்து காணாமல் போக போகும் கோவில் சுவர்களில் மட்டும் யாருக்கும் புரியாத எழுத்துகளாய் கல் வெட்டில் என்றாவது ஒரு நாள் ஒரு அயல் நாட்டு ஆராய்ச்சி மாணவன் வந்து படித்து சொல்வான் என்று காத்து கிடக்கும்.
விருந்துக்கு வந்த வெள்ளையனை வேட்டைக்கு அழைத்து சென்று வெறும் கையால் புலியை வீழ்த்தி அதன் பல் பிடுங்கி பரிசாக கொடுத்த மருதுவின் வீரம் பரங்கி பிரபுவின் நாட்குறிப்பேட்டில் மட்டும் காணப்படும். தினவெடுத்த தோள்கள்களுடன் வெள்ளையருடன் வாளெடுத்து வீசிய வரலாறு அந்நிய மொழியில் படித்து அந்த வம்சத்தில் வந்தவர்களா நாங்கள் என்று அதிசயக்கும் நாள் வந்து கொண்டு இருக்கிறது.
வாழ்நாள் எல்லாம் அர்ப்பணித்து ஞானாலயம் எழுப்பிய தியாகமெல்லாம் வசதியாக வாழ தெரியாமல் வாரி இறைத்து வீணாக்கிய வரிசையில் சேர்க்கபடும். அந்நியர் கையால் தமிழன் அழிந்ததை வேடிக்கை பார்க்க முடிந்த நம் கண்ணேதிரில் நம் தமிழ் அழிவதை மட்டும் வேடிக்கை பார்க்க முடியாதா என்ன? வீழ்வது தமிழாக இருந்தாலும் வாழ்வது நாமாக இருக்கட்டும்.
முடிவுரை : சுற்றி நிகழ்ந்த சில நிகழ்வுகளால் சுடபட்டு வந்து விழுந்த வார்த்தைகளின் வடிகல் இது. உங்கள் மாற்று கருத்துகளை கேட்க என் செவிகள் திறந்து இருக்கவில்லை. அதனால் விவாதங்களை தவிர்க்கவும். நன்றி!!
.